×

சின்ன சண்டையால் குடும்பத்தை விட்டு பிரிந்து பரிதவிப்பு 70 வயது முதியவரை 20 வருடம் கழித்து மகன்களிடம் ஒப்படைத்த இளைஞர்கள்: நத்தம் அருகே நெகிழ்ச்சி சம்பவம்

நத்தம்: நத்தம் அருகே குடும்பத்தை விட்டு பிரிந்து பரிதவித்த முதியவரை 20 வருடங்கள் கழித்து அவரது குடும்பத்தை கண்டுபிடித்து இளைஞர்கள் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மூன்று லாந்தர் அருகே உள்ளது காந்தி கலையரங்கம். இங்கு பல வருடங்களாக பாலுச்சாமி (70) என்பவர் தனியாக ஆதரவின்றி தங்கியிருந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் அவருக்கு உணவு வழங்கி வந்தனர். சமீபத்தில் அவரது ஊர் மற்றும் குடும்பம் பற்றி விசாரித்தனர். அப்போது அவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே நரிக்குடியை சேர்ந்தவர் என தெரியவந்தது. 4 மகன்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மீதம் 3 பேர் இருப்பதாக கூறினார். இதையடுத்து அவரது குடும்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்கினர். அவரது புகைப்படத்தை வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதை பார்த்த முதியவரின் மகன்கள் குமார், ரமேஷ் ஆகியோர் தந்தையை தேடி நேற்று நத்தம் காவல்நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து போலீசார், வழக்கறிஞர்கள், நத்தம் சேவை நண்பர்கள் குழுவினர் பாலுச்சாமியை அவரது மகன்களிடம் ஒப்படைத்தனர். பல வருடங்கள் கழித்து தந்தையை பார்த்த மகன்கள் ஆனந்த கண்ணீர் மல்க அவரை அழைத்துச் சென்றனர். மகன்கள் கூறுகையில், ‘‘எங்கள் தந்தை குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சண்டையால் கோபித்துக் கொண்டு 20 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது அவரை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை சேர்க்க உதவிய இளைஞர்களுக்கு நன்றி’’ என்றனர்.



Tags : Nannam , Young people who separated from their family due to a petty quarrel and handed over a 70-year-old man to his sons after 20 years: Leschi incident near Natham
× RELATED திண்டுக்கல்- நத்தம் ரோட்டில் ‘தெரியாத’ டிவைடரால் தொடர் விபத்து