×

நாகர்கோவிலில் அதிமுக ஆட்சியின்போது ஏபிஆர்ஓ வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ1 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

நாகர்கோவில்: உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ1 கோடியே 25 ஆயிரம் வரை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் கோட்டார் இளங்கடை அல்அமீன் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது நண்பர் சிவதாணுலிங்கம். இவர் மூலம் சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரபுரம் தெற்கு வீதியை சேர்ந்த பிரபா (45) என்பவரின் அறிமுகம் முகமது அலிக்கு கிடைத்தது. ரியல் எஸ்டேட் அதிபரான பிரபா, தனக்கு தெரிந்த முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாக கூறினார். குறிப்பாக கடந்த 2019ல் ஆட்சியில் இருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலரின் பெயர்களை கூறி தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என தெரிவித்தார்.

இந்த சமயத்தில் சிவதாணுலிங்கம், முகமது அலியின் மகள் பாத்திமா ரமீஸாவுக்கும் (38) அரசு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது பிரபா, செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக (ஏபிஆர்ஓ) தன்னால் பணி வாங்கி கொடுக்க முடியும். அதற்காக ரூ1 கோடி வரை தேவைப்படும். நீங்கள் பணத்தை தயார் செய்து கொடுத்தால் வேலை நிச்சயம் என கூறி உள்ளார். இதையடுத்து சிவதாணுலிங்கம் முகமது அலி வீட்டுக்கு, பிரபாவை அழைத்து சென்று இந்த விபரத்தை கூறி உள்ளார். இதை நம்பி முகமது அலி மகள் பாத்திமா ரமீஸா கடந்த 12.9.2019 முதல் 8.9.2020 வரை பல தவணைகளாக பிரபாவின், வங்கி கணக்கிற்கு ரூ1 கோடியே 25 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார்.

 ஆனால் பணத்தை பெற்ற பிரபா, வேலை வாங்கி கொடுக்கவில்லை. அதன் பின்னரே தான், ஏமாற்றப்பட்டது பாத்திமா ரமீஸாவுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்திடம், பாத்திமா ரமீஸா புகார் அளித்தார்.  புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பிரபா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கு, சொத்து விபரங்கள் குறித்தும்  ஆய்வு செய்து வருகிறார்கள்.


Tags : AIADMK ,Nagercoil , Real estate tycoon arrested in Nagercoil scam of Rs 1 crore from woman claiming to get APRO job during ADMK rule
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...