×

சொத்துவரி செலுத்தாவிட்டால் வீடுகளுக்கு சீல் வைக்க திட்டம்?: சென்னை மாநகராட்சி ஆலோசனை

சென்னை: சென்னையில் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வீட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சொத்துவரி மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது. அதன்படி சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சியில் கடிதம் கொடுத்தனர்.

என்றாலும் சொத்து வரி வசூலிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதிருப்தியில் இருப்பவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோட்டீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும். வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னையில் சொத்து வரியை முழுமையாக வசூல் செய்தால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,400 கோடி வருமானம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயர்த்தப்பட்ட சொத்துவரி முழுமையாக வசூலிக்கப்பட்டால் சென்னை மாநகராட்சிக்கு மேலும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை ஆன்லைன் மூலம் சென்னை மாநகராட்சி விளக்கி உள்ளது.

Tags : Chennai Corporation , Plan to seal houses for non-payment of property tax?: Chennai Corporation advises
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...