×

மெரினா காமராஜர் சாலையில் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு மாரத்தான் ஓட்டம்: பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் சிறப்பு மாரத்தான் ஓட்டம் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டமாக இந்த சிறப்பு ஓட்டம் அமைந்துள்ளது. வெற்றிக்கான தொடக்கமாக அமைந்துள்ளது. செஸ் விளையாட்டு வீரர்கள் நட்சத்திர விடுதிகள் உள்பட 24 இடங்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட உள்ளனர். 344 மருத்துவ பணியாளர்கள் கொண்டு வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ முகாம்கள் உள்பட தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், இன்று (நேற்று) மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி தொடங்குகிறது. அங்கு 100 சதவீத பணிகள் நிறைவடைந்து அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உலக சாதனை நிகழ்த்தும் வகையில் 1414 வீரர்கள் ஒரே நேரத்தில் ஒத்திகை போட்டியில் கலந்துகொள்கின்றனர். இதற்காக 707 செஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த செஸ் போர்டுகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் போட்டிக்கான கள நிலவரங்களை இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்’ என்றார்.

Tags : Olympiad Special Marathon Run ,Marina Kamarajar Road , Chess Olympiad Special Marathon Run at Marina Kamarajar Road: Public, Athletes Participate With Enthusiasm
× RELATED தலைமை செயலாளர் கார் மீது ஆட்டோ மோதி விபத்து