×

பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் குரங்கம்மை: ஒன்றிய அரசு அவசர ஆலோசனை

புதுடெல்லி: கேரளாவைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரையில் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்நோயால் பாதித்துள்ளனர். 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால், இந்த நோயை மருத்துவ அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்தியாவில் இந்நோய் பாதித்த முதல் நபர், கடந்த 14ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் கண்டறியப்பட்டார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வந்தவர். இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு இந்த நோய் தொற்றால் பாதித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியிலும் 31 வயதான மவுலானா ஆசாத் என்பவருக்கு நேற்று குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.  

இதனமூலம், இந்தியாவில் இந்த நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு காய்ச்சல், தோலில் கொப்பளங்களும் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆசாத் சமீப காலமாக எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு உள்ளூரில் இந்த தொற்று ஏற்பட்டு இருப்பது, அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து குரங்கம்மை பாதித்த நோயாளிகள் கண்டறியப்பட்டு வருவதால், ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், இந்த நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களும் எச்சரிக்கப்பட்டு உள்ளன.

* விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு
இந்தியாவில் சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவருக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல், குரங்கம்மை முதல் பாதிப்பும் இந்த மாநிலத்தில்தான் ஏற்பட்டுள்ளது. எனவே, நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Kerala ,Delhi ,Kurangammam ,Union Government Emergency Advisory , Number of cases rise to 4, followed by Kerala, Delhi also in Kurangammam: Union Government Emergency Advisory
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...