பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இலங்கை 315 ரன் குவிப்பு; பெர்னாண்டோ, சாண்டிமால் அரைசதம்

கல்லே: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின், முதல்நாளில் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் குவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி கல்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கருணாரத்னே, பெர்னாண்டோ தொடக்க ஜோடியாக களமிறங்கினர்.

நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 92 ரன் சேர்த்தது. அரை சதம் அடித்த பெர்னாண்டோ, பாகிஸ்தானின் முகமது நவாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால்மெண்டீஸ் 3 ரன்னில் சல்மானால் ரன் அவுட் செய்யப்பட்டார். களத்தில் நின்றிருந்த கேப்டன் கருணாரத்னே 40 ரன்னில் வெளியேறினார். 4 வது விக்கெட்டுக்கு மேத்யூஸ்-சாண்டிமால் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இதனால் இலங்கையின் ரன் ரேட் உயர்ந்தது. அரை சதத்தை கடந்து சாண்டிமால் அசத்தினார். மேத்யூஸ் 42 ரன்னிலும், சண்டிமால் 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த தனஞ்ஜெயா 33 ரன்னில் நசிம்ஷா பந்தில் போல்டானார். அப்போது இலங்கை 290/6 ரன் அடித்திருந்தது. 7வது விக்கெட்டிற்கு டிக்வெல்லா-வெல்லலேஜ் ஜோடி நிதானமாக ஆடியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் குவித்துள்ளது. டிக்வெல்லா 42 ரன்னுடனும், வெல்லலேஜ் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 2, யாசிர்ஷா, நசிம்ஷா, நியூமன்அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டத்தை இலங்கை தொடரவுள்ளது.

Related Stories: