கெஜ்ரிவால் பேனரை கிழித்து மோடி பேனர் வைத்த போலீஸ்: டெல்லி விழாவில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் அவரின் புகைப்படத்தை கிழித்துவிட்டு மோடியின் படங்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ‘வான் மகோத்சவ்’ என்ற நிகழ்ச்சி டெல்லியில் உள்ள சென்டிரல் ரிட்ஜில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் சக்சேனா, முதல்வர் கெஜ்ரிவால், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சரணாலயத்திற்கு வந்த போலீசார், டெல்லி அரசு வைத்திருந்த கெஜ்ரிவால் படம் இருந்த பேனரை கிழித்து வீசியெறிந்து, அந்த இடத்தில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்ற பேனரை வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், ‘ஆளுநர் சக்சேனா மற்றும் முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்த பேனர்களை வலுக்கட்டாயமாக கிழித்த போலீசார் அந்த இடத்தில் மோடி படம் இருந்த பேனர்களை வைத்தனர். பின்னர், மோடி படங்கள் உள்ள பேனர்களை யாரும் தொடக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றனர்’ என்றார். போலீசாரின் இந்த செயலால் கெஜ்ரிவால் உட்பட அமைச்சர்கள், எங்கள் கட்சியை சேர்ந்த எம்பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ள போவதில்லை. பிரதமர் அலுவலகத்தின் தூண்டுல் பெயரிலே காவல் துறையினர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, ஆளுநர் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்’ என்றார்.

Related Stories: