×

பெண்களுக்கு சுதந்திரம் அளித்தால் உயரத்தை தொடுவார்கள்: கிருத்திகா உதயநிதி பேச்சு

சென்னை: தமிழில் ரிலீசான ‘வணக்கம் சென்னை’, ‘காளி’ ஆகிய படங்களுக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள வெப்தொடர், ‘பேப்பர் ராக்கெட்’. காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், நிர்மல் பழனி, கருணாகரன், கவுரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் குமார், சைமன் கே.கிங், வேத்சங்கர் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

இத்தொடரின் பாடல் வெளியீட்டு விழாவில் கிருத்திகா உதயநிதி பேசியதாவது: இது பயணகதை. ஓடிடிதளங்களில் கிரைம் திரில்லர் படங்கள் மற்றும் தொடர்களை தேர்வு செய்து வெளியிட்டபோதிலும், இந்ததொடரின் கதை பிடித்து தயாரிக்க ஒப்புக்கொண்டதே இதன் முதல் வெற்றி. நடித்த அனைவரையுமே தயக்கத்துடனேயே அணுகினேன். ஆனால், அவர்கள் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு சிறப்பாக நடித்தனர். சிம்பு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற ஆசை இருக்கிறது. அதற் கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமையலாம். கமல்ஹாசன் வாழ்த்து அனுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினால், 70 முதல் 80 சதவிகிதம் அவர்தான் நிறைந்திருப்பார். புதியவர்களை வரவேற்று ஊக்கம் அளிப்பவர் அவர். நான் சினிமாவுக்கு வருவதற்கு எனது குடும்பத்தினர் அனுமதி அளித்தனர். என் கணவர் அனுமதி வழங்கி, தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார். குடும்பத்திலுள்ள பெண்களுக்கு அவர்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு அனுமதியும், சுதந்திரமும் அளித்தால், அவர்கள் ‘பேப்பர் ராக்கெட்’டை விட உயரமாக பறப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். உதயநிதி ஸ்டாலின், சிம்பு, விஜய் ஆண்டனி, மிர்ச்சி சிவா, மிஷ்கின், மாரி செல்வராஜ், பாலாஜி தரணீதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Krithika Udayanidhi , If women are given freedom, they will reach heights: Krithika Udayanidhi speech
× RELATED ரஹ்மான் இசையில் பாடினார் ஸ்ருதி