×

தமிழக மீனவர்கள் விடுதலைக்கு ஒன்றியஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலைக்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூலை 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 12 பேரை வேதாரண்யம் அருகே, எல்லை தாண்டி வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஜூலை 4ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகையும், அதில் இருந்த அந்தோணி, அஜித் உள்ளிட்ட 6 மீனவர்களையும் கைது செய்து இலங்கையின் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதையும், தாக்குதலுக்கு உள்ளாவதை கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கி உள்ளனர்.

இதில் 5 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்று உள்ளனர். துறைமுகத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வரை மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய ஒன்னறிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Union Government ,Tamil Nadu ,VICO , Union government should take immediate action for the release of Tamil Nadu fishermen: VAICO insists
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...