திருவள்ளூர் அருகே ஆசிரியையிடம் 3 சவரன் பறிப்பு: ஆசாமிகளுக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் செயின் பறித்து பைக்கில் தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. (58). இவர், திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், பள்ளியில் இருந்து வீட்டுக்கு கிளம்பிய இவர், தன்னுடன் சக ஆசிரியை சோபியாவை அழைத்துக்கொண்டு பண்ணூர் கிராமத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர், அந்த ஆசிரியை அங்கு விட்டுவிட்டு தனது வீட்டிற்கு ஆரோக்கியமேரி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். இதில், பின் சீட்டில் முகத்தை துணியால் மூடியிருந்த நபர், கீழே இறங்கிவந்து ஆசிரியை ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து இழுத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர், செயினை விடாமல் பிடித்துக்கொண்டு திருடன், திருடன்... என கூச்சலிட்டதால், கையில் கிடைத்த 3 சவரன் செயினுடன் மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர். இதுகுறித்து ஆசிரியை கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: