×

பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை; தமிழகத்தை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வே: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்

நாகர்கோவில்: கேரளாவுக்கு அள்ளி கொடுக்கும் தெற்கு ரயில்வே, தமிழகத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான விளங்குவது ரயில்வே துறை ஆகும். சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. நீள ரயில் பாதையை உடையதாகும். இந்திய ரயில்வே மொத்தம் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தெற்கு ரயில்வே என்பது சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூர ரயில் பாதை, தெற்கு ரயில்வே துறைக்கு உட்பட்டு அமைந்துள்ளது. இதன் கீழ் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கினாலும் கூட, கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் தெற்கு ரயில்வே துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்கத்தில் தொடங்கி புதிய ரயில் பாதை உருவாக்கம், புதிய ரயில்கள் இயக்குதல் போன்றவற்றின் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் தெற்கு ரயில்வே துறையால் வழங்கப்படுகிறது என்பது பல அறிவிப்புகள் மூலம் தெளிவாகிறது என ரயில்வே பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

குறிப்பாக, தெற்கு ரயில்வே கோடை காலத்தில் திருநெல்வேலி - தாம்பரம், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், நாகர்கோவில் - தாம்பரம், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி போன்ற சிறப்பு ரயில்களை இயக்கியது. இவ்வாறு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை மட்டும் மீண்டும் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் இயக்கப்பட்ட நாகர்கோவில் - தாம்பரம் மற்றும் திருநெல்வேலி - தாம்பரம் ஆகிய இரண்டு சிறப்பு ரயில்களும் தான், சிறப்பு ரயில்களில் அதிக வருவாய் தந்த ரயில்கள் ஆகும். ஆனால் இந்த ரயில்களை நீட்டிப்பு செய்ய வில்லை. கடும் போராட்டத்துக்கு பின் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை, அறிவிப்புகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக நடத்தப்பட்ட தேர்வுக்கு வேண்டி சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கியது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் திருநெல்வேலி - மைசூர் சிறப்பு ரயில் திருநெல்வேலி பனிமனையில் பராமரிப்பு செய்து திருநெல்வேலியிருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் வழியாக கேரளா பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டது. ரயில்வே வாரியத்தின் ஆணைப்படி தெற்கு ரயில்வேயில் இயங்கி வந்த லிங்க் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இவ்வாறு ரத்து செய்யப்பட்டதில் தூத்துக்குடி - கோயம்புத்தூர், தூத்துக்குடி - சென்னை ரயில்கள், திருநெல்வேலி - மயிலாடுதுறை ஆகிய லிங்க் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கேரளாவில் உள்ள ஒரே ஒரு லிங்க் ரயில் திருவனந்தபுரம் - நீலம்பூர், பாலக்காடு ரயில்கள் தனித்தனி இரண்டு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ஆலப்புழா- தன்பாத் - டாடா நகர் லிங் ரயில் ஒரே ரயிலாக இயங்கி வந்தது. இதில் ஆலப்புழா - தன்பாத் தினசரி ரயில், ஆலப்புழா - டாடா நகர் வாரம் இரண்டு முறை ரயில் என தனித்தனி வெவ்வேறு எண் கொண்ட ரயில்களாக இயங்கி வருவது எப்படி? என தமிழ்நாடு ரயில் பயணிகளின் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கன்னியாகுமரி - நியூ ஜல்பைகுரி சிறப்பு ரயிலை இயக்கியது. கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழித்தடம் குறைந்த தொலைவு கொண்டு சுமார் 90 சதமானம் இரு வழிபாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகும் கூட, இந்த ரயிலை கேரளா வழியாக இயக்கினர்.

திருநெல்வேலியிருந்து செங்கோட்டை , கொல்லம் , எர்ணாகுளம் வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படும் ரயில் திருநெல்வேலியில் பராமரிப்பு செய்து இயக்கப்படுகின்றது. கொரோனாவுக்கு பிறகு இயக்கப்பட்ட இந்த ரயில் திருநெல்வேலியிருந்து இரவு 11.20க்கு புறப்பட்டு தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லாமல் கேரளா பயணிகளின் வசதிக்காக காலஅட்டவணை அமைத்து திருநெல்வேலியில் பராமரிப்பு செய்து இயக்கப்படுகின்றது.
கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு கோவை வழியாக கேரளா பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் பனிமனையில் பராமரிக்கப்பட்டு திப்ருகருக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கப்படும் என்றும் அறிவித்து விட்டார்கள். இனி நாகர்கோவில் பனிமனையில் இந்த ரயிலை தினசரி பராமரிக்க வேண்டும். திருநெல்வேலி -பிலாஸ்பூர், நாகர்கோவில் - ஷாலிமார் , நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு ஆகிய ரயில்களும், கேரளாவின் நன்மையை கருத்தில் கொண்டே இயக்கப்படுகின்றன.

கேரளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் தமிழக ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக அதிக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் திருநெல்வேலி, நாகர்கோவிலிருந்து கேரளா வழியாக சுற்று பாதையில் செல்லும் ரயில்கள் இயக்குவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு ரயில்கள் இயக்க முக்கிய காரணம் குமரி மாவட்ட பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் இருப்பதே ஆகும். ஆகவே இந்த பகுதிகளை ரயில்வே வாரியத்தின் திட்ட கருத்துருவின்படி மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். தற்போது நாடாளுமன்றம் நடைபெற்று வருகின்ற காரணத்தால் தமிழக எம்.பி.க்கள், இந்த பிரச்சினையை எழுப்பி ரயில்வே அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் எட்வர்ட் ெஜனி கூறி உள்ளார்.

Tags : Southern Railway ,Tamil Nadu ,MPs ,Parliament , Demand of passenger associations; Southern Railway ignoring Tamil Nadu: MPs should speak up in Parliament
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்