×

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் 3வது கப்பல் மூலம் 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைப்பு: இதுவரை தமிழக அரசுக்கு ரூ.196.83 கோடி செலவு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் இன்று 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய  மூன்றாவது கப்பலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக  அமைச்சர்களும் அனுப்பி வைத்துள்ளார்கள். இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன்  பால் பவுடர் மற்றும் 102 மெட்ரிக் டன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து  பொருட்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கப்பல்  போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித்தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அனுமதியை ஒன்றிய அரசிடம் கோரி பெற்றார். இதன் அடிப்படையில் இலங்கையில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதை கருத்தில் கொண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இப்பணிக்காக ரூ.177 கோடியை ஒதுக்கீடு செய்து உத்திரவிட்டார். மேலும், இத்தகைய பெரும் மனிதாபிமானப் பணியில் தமிழக மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கை மக்களுக்கான நிவாரண பணிக்கு தேவையான நன்கொடைகளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் மனமுவந்து நிதி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வரின் அறிவிப்பின் அடிப்படையில் இப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான பணி உடனடியாக தொடங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை மக்கள் பயன்படுத்த கூடிய அரிசி வகைகளும் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள 85 அரிசி ஆலைகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் பால் பவுடர் ஆவின் நிறுவனத்திடம் இருந்தும், மருந்துப் பொருட்கள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டன. இப்பணிகள் அனைத்தும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு 9075 மெட்ரிக் டன் பொருட்கள் அடங்கிய முதல் கப்பலை 18.5.2022ல் சென்னை துறைமுகத்தில் இருந்து, இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரி தொகுப்பு இலங்கை துணை தூதரிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22.06.2022 அன்று 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இரண்டாவது கப்பலை தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். அடுத்த கட்டமாக நேற்று (23ம் தேதி) 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சர்களும் அனுப்பி வைத்துள்ளார்கள்.

இவ்வாறு மூன்று கப்பல்களில் இதுவரை தமிழக முதல்வர் அறிவித்தவாறு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 102 மெட்ரிக் டன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. இத்தொகையில் 8.22 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்புகள் மூலமாகவும் எஞ்சியுள்ள 188.61 கோடி ரூபாய் தமிழக அரசின் சொந்த நிதியில் இருந்தும் செலவிடப்பட்டுள்ளது.

அனைவரும் பாராட்டியுள்ள இந்த நடவடிக்கையால் இலங்கையில் பொது மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் சூழலை, தொடர்ந்து கண்காணித்து அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , 16,595 metric tonnes of essential goods sent by 3rd ship to help Sri Lankan people: Rs 196.83 crore cost to Tamil Nadu Government so far
× RELATED 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய...