திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள் தெப்ப உற்சவ விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு இன்று 2ம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை, ஆடி பரணி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மூலவர் முருகர் மற்றும் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் எழுந்தருளி உள்ள முருகர் ஆகியோருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் விபூதி ஆகிய வாசனை திரவியங்கள் மூலமும் பலவகை பழங்கள் மூலமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று மாலை முதல் நாள் தெப்ப உற்சவம், சரவண பொய்கை குளத்தில் நடைபெற்றது. இதில் மலைக்கோயிலில் இருந்து படிக்கட்டு வழியாக முருகர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்துக்கு வந்தார். பின்னர் தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.  

நேற்று ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்கவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி, நகர பொறுப்பாளர் வினோத்குமார், வருவாய் கோட்டாட்சியர் நசரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா உள்பட பலர் இருந்தனர்.இன்று மாலை 2ம் நாள் தெப்ப திருவிழா நடைபெற்றது. இன்று முருகர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகரை வழிபடுகின்றனர்.

Related Stories: