‘தெய்வ மகளே’ பாடல் மூலம் பிரபலம்: தேசிய விருது பெற்ற பாடகிக்கு பாரம்பரிய இசையுடன் வரவேற்பு

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் அட்டப்பாடி சேர்ந்தவர் நஞ்சம்மாள்(70). பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர்கள் 18 ஆண்டுக்கு முன்பு உருவாக்கிய இசைக்குழுவில் கிராமிய பாடகராக இணைந்து பல நிகழ்ச்சிகளில் பாடி வந்துள்ளார். இந்நிலையில் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாள திரைப்படத்தை எடுக்க அட்டப்பாடிக்கு இயக்குனர் சட்சி வந்தார்.

அப்போது அவர் தன்னுடைய படத்தின் கிராமிய பாடல் ஒன்றை பாடுவதற்கு ஒருவரை தேடி உள்ளார். அப்போதுதான் அவர் நஞ்சம்மாளை சந்தித்து அவரின் குரல் நன்றாக இருக்கவே அவரை தனது படத்தில் பாட வைத்துள்ளார். படம் வெளியாகி நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதற்காக கடந்த ஆண்டு கேரள மாநில விருதைப் பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் பாடிய நஞ்சம்மாளை சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்துள்ளது.

இந்த தகவல் வெளியானது முதல் அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்விருதைப் பெற்ற நஞ்சம்மாளுக்கு அப்துல் கலாம் ஆதிவாசிகள் உண்டு உறைவிட பள்ளி சார்பாக பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனக்கு கிடைத்துள்ள தேசிய விருதை இயக்குனர் சட்சிக்கும், பழங்குடியினர் மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக நஞ்சம்மாள் தெரிவித்துள்ளார். இந்த விருதை பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிராமிய பாடல் பாடக்கூடிய நஞ்சம்மாள் பெற்றதன் மூலமாக தங்களுடைய பாரம்பரிய கலை உயிர்ப்புடன் மீண்டும் அடுத்த தலைமுறை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறியுள்ளார். ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் ‘தெய்வ மகளே’ என்று தொடங்கும் பாடலை நஞ்சம்மாள் எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: