பீகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் சரக்கு அடிச்சுட்டு கம்முனு படுங்க!: குடிமகன்களுக்கு மாஜி முதல்வர் அறிவுரை

பாட்னா: பீகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் மது குடிப்போர் சரக்கு அடித்துவிட்டு அமைதியாக படுத்து தூங்குவது தான் சரியானது என்று குடிமகன்களுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி அறிவுரை கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையான அரசில், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சியின் கட்சியும் கூட்டணியில் உள்ளது. இம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதால், சட்டவிரோத மதுபானங்களை கடத்துதல், குடித்தால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமீபத்தில் பொது இடத்தில் மதுபோதையில் தகராறு செய்த ஒருவரை போலீசார் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து ஜிதன் ராம் மஞ்சி கூறுகையில், ‘மிகவும் பின்தங்கிய மாநிலத்தை சேர்ந்த மக்கள், மதுபானம் அருந்தும் விதத்தை செல்வந்தர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அவர்கள் மது அருந்துவது வெளியே தெரியாது. அதனால் அவர்களை பிடித்து யாரும் சிறையில் அடைப்பதில்லை. கடின உழைப்புக்குப் பிறகு உடல் சோர்வடைந்து விடுவதால், சாலையோரத்தில் மதுபோதையில் இருந்தவரை போலீசார் இழுத்து சென்றது மிகவும் மூர்க்கத்தனமானது. மது அருந்த விரும்பும் மக்கள், இரவில் குடித்துவிட்டு போலீசாரிடம் பிடிபடாமல் அமைதியாக தூங்குங்குகள். இதனை பெரிய மனிதர்களிடம் இருந்து மது குடிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவ ஆய்வின்படி கொஞ்சம் மதுபானத்தை குடிப்பதில் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளதால், மது பானத்தை குடிப்பதில் தவறு இல்லை’ என்று கூறினார். இவரது கருத்து பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: