×

கீழடி அகழாய்வு பொருட்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் : பெங்களூரு சுற்றுச்சூழல் ஆய்வாளர் பேட்டி

திருப்புவனம் : கீழடி அகழாய்வுப் பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் என பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில், கிடைத்த பொருட்களின் போட்டோக்கள் அனைத்தும் பார்வையாளர்கள் கண்டு செல்லும் வகையில் திறந்தவெளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி வரும் பார்வையாளர்கள் அகழாய்வு பணி நடக்கும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

கர்நாடக மாநிலம், பெங்களுரூவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் டாக்டர் சுருதி, கீழடி திறந்தவெளி காட்சிக்கு நேற்று வந்திருந்தார். அவர் கீழடி தளம் மற்றும் பொருட்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கீழடி அகழாய்வு தளமும், அதிலிருந்து கிடைத்த பொருட்களும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். பண்டைய கால அறிவியல் குறித்து உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறேன்.

தங்கம் உள்ளிட்ட பொருட்களில் நாணயம், நகை தயாரிக்கும்போது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், மெர்குரி என்ற பாதரசம் கொண்டு தயாரிப்பார்கள். 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி பொருட்களை தயாரித்துள்ளனர். சுடுமண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள 100 ஏக்கர் இடங்களையும், பொருட்களையும் பாதுகாக்க அரசிடம் பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும்’ என்றார். அவருடன் வந்த மலேசியாவைச் சேர்ந்த மோகன் சுப்ரமணியன் கூறுகையில், ‘‘ராஜராஜ சோழன் உள்ளிட்ட தென்னிந்திய அரசர்கள் இந்திய பெருங்கடல் வழியாக மலேசியா வரை வந்துள்ளனர். மலேசியாவில் புஜங் பள்ளத்தாக்கு வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகவும் புகழ் பெற்றது.

புஜங் என்றால் கடாரம் என அர்த்தம். அதனால்தான் கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என அழைக்கப்பட்டனர். கீழடியை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி’’ என்றார். கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில், இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

Tags : Keeladi, Tirupuvanam,Bengaluru
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...