×

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசிக்கு உலா ரயில்

மதுரை : ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசி உலா ரயிலை நேற்று அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரை - காசி இடையே உலா ரயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. இதை ஒன்றிய பாராளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ரயில்வே இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹேப் தாதராவும் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர், விஜயவாடா வழியாக காசி சென்றடையும். ஏழு சக்தி பீடங்கள் பாத கயா, நாபி கயா மற்றும் ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை, பூரி ஜெகன்நாதர் கோயில், கொனார்க் சூரியக் கோயில், கொல்கத்தா உள்ளூர் சுற்றுலா, காசி விசுவநாதர், அன்னபூரணி தரிசனம், பின்னர் விஜயவாடா கனகதுர்கா தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது. சுற்றுலா செல்லும் மொத்த தூரம் 5,548 கிலோமீட்டர் ஆகும். குறைந்த கட்டண பிரிவில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.3.88 கட்டணமாக அமைந்துள்ளது.

 இந்த 12 நாள் சுற்றுலாவில் நாளொன்றுக்கு ரூ.1,792 கட்டணமாக அமைந்துள்ளது. 560 பயணிகள் பயணம் செய்யும் இந்த சுற்றுலா ரயிலில், 85 சதவீதம் அதாவது 470 பேர் பதிவு செய்துள்ளனர். மதுரையில் இருந்து 170 பேர் செல்கின்றனர். சுற்றுலா முடிந்து இந்த ரயில் ஆக.3ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது.மதுரையில் நேற்று நடந்த விழாவில் தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் செந்தில்குமார், முதன்மை ரயில் இயக்க மேலாளர் சிவக்குமார், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த சுற்றுலா ரயில் ஆக.23ம் தேதி மதுரையில் இருந்து ஷீரடி, சனி சிக்னாபூர், த்ரயம்பகேஷ்வர், பஞ்சவடி, பண்டரிபூர், மந்திராலயம் ஆகிய ஆன்மீக தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா உலா ரயில் இயக்கப்பட இருக்கிறது. செப்.2ம் தேதி மதுரையிலிருந்து கோவா, மும்பை, அமிர்தசரஸ் பொற்கோயில், ஜெய்ப்பூர், அஜ்மீர் ஆகிய சுற்றுலா தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா ரயிலும் இயக்கப்பட இருக்கிறது.இந்த ரயில்களுக்கு பயணச்சீட்டு பதிவு செய்ய www.ularail.com என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 73058-58585 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

லோகோ இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மதுரை - காசி ரயிலை காலை 11.20 மணியளவில் ஸ்டார்ட் செய்து, சிறிது நேரம் பின்நோக்கி வந்து 12.20 மணியளவில் புறப்பட தயாராக வைக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. பின்னர் சரி செய்யப்பட்டது. 12.10 மணியளவில் ரயிலை ஸ்டார்ட் செய்து, தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.


இதனையடுத்து, 12.20 மணியளவில் புறப்பட வேண்டிய ரயில் 15 முதல் 20 நொடிகள் தாமதமாக புறப்பட்டது. இதன்பேரில், சரியான நேரத்தில் ரயிலை தவறியதாக லோகோ இன்ஸ்பெக்டர் துளசிராமை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அவர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் வழங்கப்பட்டது.



Tags : Madurai ,Kashi ,Audi , Madurai, kasi, Train. Aadi Ammavasai
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை