துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த மம்தா... ‘ஈகோ’ பார்க்கும் நேரம் இதுவல்ல: மார்கரெட் ஆல்வா கருத்து

டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலை திரிணாமுல் கட்சி புறக்கணித்த நிலையில், இப்போது ஈகோ பார்க்கும் நேரம் இது அல்ல என்று எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு ெவற்றி பெற்றார். எதிர்கட்சிகளின் சார்பில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டார். துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் ஜக்தீப் தன்கர் களம் இறக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக திரிணாமுல் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி திடீரென அறிவித்தார். இவரது அறிவிப்பு எதிர்கட்சிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மார்கரெட் ஆல்வா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘துணை ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. திரிணாமுல் கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன். ‘ஈகோ’ அல்லது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் இது அல்ல.

இப்போது தைரியம், தலைமைத்துவம், ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான நேரமாகும். தைரியத்தின் உருவகமாக பார்க்கப்படும் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளுடன் நிற்பார் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 6ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில், 36 எம்பிக்களை கொண்ட திரிணாமுல் கட்சி விலகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் ஜக்தீப் தன்கரை ஆதரிக்க மாட்டோம் என்று திரிணாமுல் கட்சி கூறுகிறது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் டார்ஜிலிங் சென்ற மம்தா பானர்ஜியை முன்னாள் மேற்குவங்க ஆளுநரும், தற்போதைய துணை ஜனாதிபதி வேட்பாளருமான ஜக்தீப் தன்கர், பாஜகவின் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் சந்தித்து பேசியது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக எதிர்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: