×

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் 30ம்தேதி நடக்கிறது: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வரும் 30ம்தேதி நடக்கிறது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் கொரோனா மற்றும் டெங்கு பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் தடுப்பு  மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க மாநகராட்சி மாமன்ற கூட்டம் கூட உள்ளது.  அதன்படி,  சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வரும் 30ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மேயர் பிரியா தலைமையில், துணைமேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன் தீப்சிங் பேடி முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த கூட்டத்தில், நிலைக்குழு தலைவர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள். பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்னதாக மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்தல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அழகுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.  மேலும், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, கொசு ஒழிப்பு, தூய்மை பணிகள், சாலைப் பணிகள் போன்றவற்றை தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Chennai Municipal ,Council , Chennai Municipal Council meeting to be held on 30th: plan to pass important resolutions
× RELATED சென்னையில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட...