அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு மானியத்தில் குழித்தட்டு காய்கறி நாற்றுகள்:தோட்டக்கலை துறை தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு தோட்டக்கலை பண்ணையில் நவீன நிழல் வலைக்குடில் அமைத்து குழித்தட்டு முறையில் கத்திரி, மிளகாய், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும், என தோட்டக்கலை துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஈக்காடு கண்டிகை கிராமத்தில், தோட்டக்கலை துறை சார்பில், 8.93 ஏக்கரில் அரசு தோட்டக்கலை பண்ணை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 1,000 சதுர அடி பரப்பளவில் 3 இடங்களில் நிழல் வலைக்குடில், பெரிய அளவிலான இரண்டு ஆழ்துளைக் கிணறு, நீர் பற்றாக் குறையை போக்க மழைநீர் சேமிக்கும் வகையில் பண்ணை குட்டை மற்றும் 1.41 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பு, பனித்துளி கூடம், மின்தடையை போக்க 10 குதிரை திறன் கொண்ட சோலார் மின்சார பேனல், தொழிலாளர்கள் ஓய்வறை மற்றும் அலுவலக அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பண்ணையில், உயர் ரக தொழில்நுட்பத்துடன் இயற்கை முறையில் வீரிய ஒட்டு ரக மிளகாய், கத்தரி, முருங்கை பப்பாளி ஆகிய நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காகவே நிழல் வலைக்குடில் அமைத்து குழித்தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் சேதாரம் இன்றி நாற்றுகள் கிடைக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள் மூலம் மானியத்தில்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பண்ணை விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் உணவுக்கு பயன்படும் காய்கறி உற்பத்தியில் பற்றாக் குறையில்லாத நிலையை உருவாக்குவதே நோக்கமாகும்.

இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெபக்குமாரி அனி கூறுகையில், ‘‘இந்த பண்ணையில் உயர்ரக தொழில் நுட்பத்துடன் மிளகாய், கத்தரி  போன்ற தரமான செடிகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காய்கறி நாற்றுகள் விவசாயிகளுக்கு மானியத்திலும், பொதுமக்களுக்கு பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் நிலம் உள்ள விவசாயிக்கு 15 ஆயிரம் கத்திரி அல்லது மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களை அளித்து மிளகாய், கத்திரி, குழித்தட்டு நாற்றுகள், அலங்கார செடிகள் மரக்கன்றுகளை பெற்று, பயனடையலாம்,’’ என்றார்.

Related Stories: