×

போரூர் அருகே 70 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது: அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

குன்றத்தூர்:  மழைக்காலங்களில் போரூர் ஏரியிலிருந்து உபரி நீர் எளிதாக வெளியேறும் வகையில் அவற்றின் மதகு மற்றும் நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் அமைக்கும் பணிக்காக, ₹ 100 கோடி மதிப்பில்  மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக, நீர்வழி தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பரணிபுத்தூரில் தந்தி கால்வாய் செல்லும் பாதையில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இதனை அகற்ற நேற்று அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வருகை தந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று திரண்டு பழமையான அந்த ஆலமரத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை குறித்து அறிந்ததும், விரைந்து வந்த அமைச்சர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, மரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் வைப்பதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இறுதியில், கால்வாய் பாதையை ஆக்கிரமித்து இருந்த ஆலமரம், தனியார் தொண்டு நிறுவனங்களின் சிறப்பு ஏற்பாட்டின் படி, நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர்,  பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, அந்த மரத்தை  அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டது. 70 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை வேறு இடத்தில் நட்டு வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Tags : Borur , 70-year-old banyan tree uprooted near Borur and planted at another place: Minister and officials applauded by public
× RELATED போரூரில் பரபரப்பு; பாத்திரத்தில் தலை...