×

திருப்போரூர், மரகத தண்டாயுதபாணி கந்தசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்

திருப்போரூர்: ஆடிகிருத்திகையை முன்னிட்டு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.  புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று ஆடிகிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முருகபெருமான், வள்ளி, தெய்வானை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

இதில், பரணி தினமான நேற்றுமுன்தினம் முதலே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்கு  வருகை தந்திருந்தனர்.  மொட்டையடித்தும், திருக்குளத்தில் நீராடியும், அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி எடுத்தும் நான்கு மாடவீதிகளில் சுற்றி வந்து முருகபெருமானை வழிபட்டனர். கிருத்திகையை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை வசதியும் செய்யப்பட்டது. சுகாதார துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து, முககவசம் அணியாமல் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் வீதிஉலா வந்தார். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு, தி.நகர், அடையாறு, பாரிமுனை, தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள பெருக்கரணை கிராமத்தில் நடுபழனி என அழைக்கப்படும் மரகத தண்டாயுதபாணி கோயில் உள்ளது.  இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், ஆடி கிருத்திகை மற்றும் பால்குட விழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில், நேற்று 37ம் ஆண்டு ஆடி கிருத்திகை மற்றும் 108 பால்குட விழா கோலாகலமாகவும் வெகு விமர்சையாகவும் நடந்தது. இதனை தொடர்ந்து,  நேற்று காலை 7 மணி அளவில் யாக பூஜையுடன் இவ்விழா துவக்கப்பட்டு, பால் குடங்களுடன் பக்தர்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வந்தனர்.  

மேலும், பகல் 12 மணி அளவில்  பக்தர்கள் கொண்டு வந்த 108 பால் குடங்களால் மரகதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.  அதன்பின், தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் மாலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில்  தண்டாயுதபாணி பக்தர்களிடையே எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.  

இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மொட்டையிட்டு முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து  ஆயிரக்கணக்கானோர் கலந்து கலந்துகொண்டு, பக்தி பரவசத்துடன் முருகனை வணங்கினர்.  இதில்,  கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags : Aadi ,Emerald Thandayuthapani Kandaswamy Temple ,Tirupporur , Aadi Krittikai ceremony at Emerald Thandayuthapani Kandaswamy Temple, Tiruporur: Devotees throng
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ