கமிஷனர் அலுவலக வாட்ஸ்அப் குழுவில் பதிவு: திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, கமிஷனர் அலுவலக வாட்ஸ்அப் குழுவுக்கு மிரட்டல் குறுந்தகவல் வந்துள்ளது.திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வாட்ஸ்அப் குழுவில் நேற்று மதியம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், நான் மனித வெடிகுண்டு. இன்று (நேற்று) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்க போறேன்டா. முடிந்தால் காப்பாற்று என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகர தெற்கு துணை கமிஷனர் ஸ்ரீதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் மற்றும் பிளாட்பாரங்கள் சுற்றுப்பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மேலும், ரயிலுக்கு காத்திருந்த பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வாட்ஸ்அப் குழுவிற்கு தகவல் அளித்த செல்போன் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஜங்ஷன் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து பயணிகள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மற்றும் உடமைகளை ஸ்கேனர் மூலம் சோதனை செய்த பின்னரே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அனுமதி அளித்தனர்.

Related Stories: