×

எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க வேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்

சென்னை: அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்கக் கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ரவீந்திரநாத்குமார் மற்றும் அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோர் இருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ரவீந்திரநாத் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறி உள்ளார். இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்கக்கோரி, ரவீந்திரநாத் எம்.பி., மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். அவரது உத்தரவுதான் செல்லும். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 11ம் தேதி அதிமுகவின் ஒரு சில பொறுப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது ஒப்புதல் இல்லாமல் கூட்டியது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால் கட்சிகளின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டேன். அவர்கள் கூட்டிய சட்ட விரோத கூட்டங்கள், நிகழ்வுகள், கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான கூட்டங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தானே அறிவித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கி தங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை. அதனால் அது செல்லுபடி ஆகாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக ரவீந்திர நாத்தை பொய்யான குற்றச்சாட்டு கூறி நீக்கியதாக தெரிவித்து உள்ளனர். இவை எதுவும் கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. ஆதலால் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த தொடர்பும் மேற்கொள்ள வேண்டாம், எவற்றையும் நடைமுறை படுத்த வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Edappadi Palaniswami ,Rabindranath ,Lok Sabha , Edappadi Palaniswami's letter should be rejected: Rabindranath MP to Lok Sabha Speaker Letter
× RELATED மக்களவை தேர்தலுக்குப் பின் எடப்பாடி...