×

என் வீட்டு நாயை குளிப்பாட்ட மாட்டீயா?: போலீஸ்காரர் மீது வழக்கு போட்டு சஸ்பெண்ட் செய்த அடாவடி எஸ்பி

திருவனந்தபுரம்: கேரளாவில் தனது வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார். முதல்வர் அலுவலகம் தலையிட்டதை தொடர்ந்து அவரது  சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  போலீஸ் தொலைத்தொடர்பு பிரிவின் எஸ்பி.யாக பணிபுரிந்து வருபவர் நவநீத் சர்மா. இவரது  மனைவி ரயில்வேயில் உயரதிகாரியாக உள்ளார். இதனால், ரயில்வே குடியிருப்பில் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கி உள்ளார். இவருக்கு 2  பாதுகாவலர்கள் உள்ளனர். சில தினங்களுக்கு  முன் இவருடைய   பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து நாயை  குளிப்பாட்டும்படி கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி  ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று டிவி பார்த்ததாக  கூறப்படுகிறது. இது குறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன்  செய்து விவரத்தை கூறியுள்ளார்.

இதில் கோபமடைந்த நவநீத் சர்மா,  தொலைத்தொடர்பு சப்-இன்ஸ்பெக்டரை அழைத்து, ஆகாஷ் தன்னுடைய வீட்டுக்குள்  அத்துமீறி நுழைந்து  பொருட்களை சேதப்படுத்தியதாக எப்ஐஆர் பதிவு செய்யுமாறு  கூறியுள்ளார். வேறு வழியின்றி எஸ்பி கூறியபடி ஆகாஷ் மீது சப்-இன்ஸ்பெக்டர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இதன் பின் ஆகாஷை உடனடியாக  சஸ்பெண்ட் செய்து நவநீத் சர்மா உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து முதல்வர் அலுவலகத்தில் ஆகாஷ் புகார் செய்தார். இதையடுத்து, சஸ்பெண்ட் உத்தரவை  உடனடியாக ரத்து செய்ய போலீஸ் தலைமையாக உதவி ஐஜிக்கு  முதல்வர் அலுவலகத்தில்  இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆகாஷின் சஸ்பெண்ட்  உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இந்த  சம்பவம் கேரள போலீசில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Adavadi SP , Won't you bathe my pet dog?: Adavadi SP suspended after suing policeman
× RELATED என் வீட்டு நாயை குளிப்பாட்ட மாட்டீயா?:...