×

சிவசேனாவின் வில்-அம்பு சின்னம் யாருக்கு?; ஆதாரத்தை 8ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: உத்தவ், ஷிண்டேவுக்கு உத்தரவு

மும்பை: சிவசேனாவின் வில்-அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் எனபதற்கான ஆதாரத்தை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் சமர்பிக்கும்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜ.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து முதல்வராகி இருக்கிறார். சிவசேனாவின் மொத்த 55 எம்.எல்.ஏக்களில் 40 எம்எல்ஏ.க்கள் தன் பக்கம் இருப்பதாக கூறியுள்ள ஷிண்டே, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று அறிவித்து, இக்கட்சியின் தேர்தல் சின்னமான வில்-அம்பை தங்களுக்கே ஒதுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.
 
அதே நேரம், தங்களிடம் விசாரணை நடத்தாமல் வில்-அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்கக்  கூடாது, அது எங்கள் கட்சி சின்னம் என்று உத்தவ் தாக்கரே அணியும் தேர்தல் ஆணையத்திடம்  மனு  அளித்துள்ளது.  இந்நிலையில், இந்த சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்வதற்கான ஆதாரங்களையும், தங்கள் அணியில் உள்ள எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களின் பட்டியலையும் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கும்படி இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இரு  தரப்பினரும் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, வில் -அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை அது முடிவு  செய்ய உள்ளது.

Tags : Shiv Sena ,Uddhav ,Shinde , Shiv Sena's bow-and-arrow symbol to whom?; Evidence to be filed by 8: Order to Uddhav, Shinde
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...