குட்கா வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி: மாஜி டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை

சென்னை: குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை ரெட்ஹில்சில் உள்ள குட்கா விற்பனை செய்யும் குடோனில் 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. இந்தச் சோதனையின்போது ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்கப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.இது குறித்து விசாரிக்கும்படி வருமான வரித்துறை சிபிஐ அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது.

அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவகலங்களில் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீட்டிலேயே சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 8 பேர் மீது குற்றப்பத்திரிகையை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, மேலும் தொடர் விசாரணை நடத்தியதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா(எ)வெங்கட்ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், தற்போது மதுரையில் வணிக வரித்துறை இணை கமிஷனராக உள்ள குறிஞ்சி செல்வம், வேலூர் வணிக வரித்துறை துணை வரி வதிப்பாளர் கணேசன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லட்சுமி நாராயணன், அதே துறையில் பணியாற்றும் முருகன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உதவி கமிஷனர் மன்னர் மன்னன், தற்போது காஞ்சிபுரத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சம்பத், சுகாதார கமிட்டியின் தலைவர் பழனி ஆகிய 11 பேர் குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு, அரசு வக்கீலின் கருத்து கேட்கப்பட்டது. அவர் கருத்துக்களின் அடிப்படையில், உள்துறைச் செயலாளர் பனீந்திரரெட்டி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்பேரில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அவர்கள் இருவருக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. மற்ற 9 பேருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய அரசின் அனுமதி வந்ததும், 11 பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: