உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே பிளவு விவகாரம்; இருவரில் யார் உண்மையான சிவசேனா?.. ‘வில் அம்பு’ கேட்டதால் வம்பு; ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: உத்தவ் - ஏக்நாத் இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இருவரில் யார் உண்மையான சிவசேனா என்பது குறித்து விசாரிக்க வசதியாக இருதரப்புக்கும் தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனாவின் 55  எம்எல்ஏக்களில் குறைந்தது 40 பேர் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம்  தாவியதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. கடந்த ஜூன்  30ம் தேதி மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார்.

இதன் பின்னணியில்  செயல்பட்ட பாஜவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அம்மாநிலத்தின்  துணை முதல்வராக பதவியேற்றார். நிலைமை இவ்வாறு இருக்க ஏக்நாத் ஷிண்டே அணி, நாங்கள்தான் உண்மையான சிவசேனா கட்சி என்றும், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான ‘வில் அம்பு’ சின்னத்தை எங்களது அணிக்கு ஒதுக்க வேண்டும் எனக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், தங்களுக்கு மொத்தமுள்ள 55 எம்எல்ஏக்களில் 40 பேரும், 19 மக்களவை எம்பிக்களில் 12 பேரும் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளது.

ஏற்கனவே தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் ஆகியோர் அங்கீகாரமளித்துள்ளதாக, அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளனர். ஏக்நாத் இவ்வாறு கடிதம் அனுப்பியிருக்க, உத்தவ் தாக்கரே தரப்பும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னம் குறித்த எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், எங்களது கட்சியின் கருத்தை கேட்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட இரு அணிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரிடமும்  பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை திரட்டி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை வரும்  ஆகஸ்ட் 8ம் தேதி விசாரிக்க உள்ளதாக  தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரும்பான்மை கட்சியினரை வளைத்து போட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று கூறியுள்ள நிலையில்,  உத்தவ் தாக்கரே தரப்புக்கு கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: