×

ஊட்டி- மஞ்சூர் சாலையில் இன்று ராட்சத கற்பூர மரம் விழுந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: ஊட்டி- மஞ்சூர் சாலையில் இன்று காலை ராட்சத கற்பூர மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள்தோறும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் விழுந்து அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் காந்திபேட்டை அருகே டிஎப்எல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத கற்பூர மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக்கடை சேதம் அடைந்தது. மரம் சாய்ந்தபோது அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு பின்னர் ராட்சத மரம் அகற்றப்பட்டது.

அதன்பின் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது. ஊட்டி- மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் காந்திப்பேட்டை வரை சாலையோரத்தில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன் இச்சாலையில் உள்ள மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Feeder- Manjur Road , A giant camphor tree fell on the Ooty-Manjoor road today causing traffic disruption for 3 hours
× RELATED யானை தாக்கி விவசாயி பலி