தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்..!

டெல்லி: தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 21ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். நாளை மறுநாள் காலை 10.15 மணிக்கு (ஜூலை 25) நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில், திரவுபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைப்பார்.

அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளித்தனர். நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பங்கேற்றனர். பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்; அனைத்து எம்.பி.,க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும்.

எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பால் உலகமே போராடி வருகிறது. கடினமான காலங்களில் இந்தியாவின் முயற்சிகள் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டன. இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை மனமார வாழ்த்துகிறேன். திரெளபதி முர்முவின் வழிகாட்டுதலால் நாடு பயனடையும் இவ்வாறு கூறினார்.

Related Stories: