ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து முருகன் கோயிலிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை ஒட்டி முருகன் கோவில்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து ஆடல், பாடல் உடன் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 5ம் படையான திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில் 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை தொடங்கி இரவு முழுவதுமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் திருத்தணியில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி கிருத்திகை விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முருகரை வழிபட்டார். 3ம் படை வீடான பழனியில் தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அடிவாரத்தில் உள்ள ஆவினன்குடி முருகன் கோவிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். திருசெந்தூரில் கடலில் நீராடிய பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்று, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். சுவாமிமலை சாமிநாதர் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொன்னேரியை அடுத்த திருவாப்புரியில் உள்ள பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் திரண்டவர்கள் அரசமரத்தில் தொட்டில் கட்டியும், தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமானை வழிபட்டவர்கள் பச்சை ஆடை அணிந்து காவடி எடுத்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பட்டுக்கோட்டை, ஒசூர் உட்பட மாநிலம் முழுவதுமாக உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை கொண்டாட்டங்கள் களைகட்டியது.     

Related Stories: