செல்போனில் 12 பெண்களின் ஆபாச படங்கள்; நடுத்தர வயது பெண்களை குறிவைத்து வீழ்த்தி ஆபாச படமெடுத்து பணம் பறித்த வாலிபர்: திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மம்சாபுரத்தை சேர்ந்த 49 வயது பெண்ணின் மகன் மதுபோதைக்கு அடிமையானவர். இவர் பெரம்பலூரில் உள்ள போதை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கிருந்து தப்பி வந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுத்தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) என்பவரிடம் பேசினார். இருவரும் சகஜமாக பேசிக்கொண்டனர். அப்போது ரஞ்சித் குமார், போதையில் இருந்த அந்த வாலிபரிடம் குடும்ப விவகாரங்கள், அந்த வாலிபரின் தாயின் போன் எண்ணை கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் ரஞ்சித்குமார், வாலிபரின் தாய்க்கு போன் செய்து, உங்களது மகன் எனது கஸ்டடியில் தான் உள்ளான். எனவே உங்களது மகன் உயிரோடு வேண்டும் என்றால் நீங்கள் வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்று பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், வேறுவழியின்றி வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது ரஞ்சித்குமார் செல்போனில் ஸ்கிரீன்ஷார்ட் எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு மீண்டும் செல்போனில் பேசிய ரஞ்சித்குமார், உடனடியாக திருச்சிக்கு வரும்படி அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபரின் தாய் திருச்சி வந்துள்ளார். அப்போது மத்திய பஸ் நிலையம் அருகே ரஞ்சித்குமார், அவருக்கு கூல்டிரிங்ஸ் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை ரஞ்சித்குமார் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்க வைத்து பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டார். பின்னர் ரஞ்சித்குமார் தொடர்ச்சியாக அவருக்கு செல்போனில் ஆபாசமான படங்களை அனுப்பியதோடு, அவரது உறவினர்களின் செல்போனுக்கும் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோக்களை அனுப்பிவைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ரஞ்சித்குமார் திருப்பூரில் உள்ள கம்பெனியில் வேலை பார்க்கும் 50வயது மதிக்கத்தக்க பெண்களிடம் பழகி பாலியல் ரீதியான படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிந்தது. முக்கியமாக, 12க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் ரஞ்சித்குமாரின் செல்போனில் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ரஞ்சித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: