மானாவாரி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க 18ம் கால்வாய் தொட்டி பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்-உத்தமபாளையம், போடி வட்ட விவசாயிகள் கோரிக்கை

கம்பம் : உத்தமபாளையம், போடி வட்டத்தில் மானாவாரி நில விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க சேதமடைந்த 18ம் கால்வாய் தொட்டிப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தள்ளனர். உத்தமபாளையம், போடி வட்டத்தில் மழையை நம்பியுள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 1999ல், அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது 18ம் கால்வாய் திட்டம்.

இத்திட்டப்படி லோயர்கேம்ப் தலை மதகிலிருந்து 40.80 கிலோமீட்டர் கால்வாய் வெட்டி, பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடைக்கு கொண்டு சென்று இணைப்பது ஆகும். மேலும் இக்கால்வாய் தண்ணீர் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்புவதால், நிலத்தடிநீர் பெருகுவதோடு, 13 கிராமங்களில் கால்நடைகளுக்கு குடிநீராகவும், 4614.25 ஏக்கர் நிலம் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும்.

பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அக்டோபர் முதல் தேதிக்குப்பின் பெரியாறு மற்றும் வைகை அணையின் இருப்பு நீர் 6250 மில்லியன் கனஅடியாக இருந்தால், 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. கடந்த ஆண்டு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் பெரியாறு, வைகையின் இருப்பு நீரை கணக்கில் கொண்டு 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என 18ம் கால்வாய் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 17ல் பெரியாறு அணையிலிருந்து 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது இப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வந்த காட்டாற்று வெள்ளம்  18ம் கால்வாய் பகுதியின் நீர் வழித்தடமான தொட்டிப்பாலத்தை இடித்து சென்றது. இதனால் 18ம் கால்வாய் வழித்தடத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் தேவாரம்  பகுதியில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பாததால் கடந்த ஆண்டு மானாவாரி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே தொட்டிப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்காக புதிதாக கட்டி வரும் தொட்டிப்பாலம் பணி இன்னும் முழுமை அடையவில்லை. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடிக்குமேல் உள்ளநிலையில், செப்டம்பர் மாதம் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் போக்கால அடிப்படையில் 18ம் கால்வாயில் தொட்டிப்பால பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18ம் கால்வாயினால் பயன்பெறும் 44 கண்மாய்கள்

உத்தமபாளையம் வட்டம்: புதுப்பட்டி இடையன்குளம், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன் குளம், கோம்பை பண்ணை புதுக்குளம், வண்ணான் குளம், பண்ணைப்பரம் ஜக்கையகவுண்டன் குளம், குள்ளமச்சான் குளம், தாதன் குளம், செட்டிகுளம், திருமலைக்கவுண்டன் குளம், காமாட்சி குளம், சிந்தலச்சேரி சீதாகவுண்டன் குளம், அரசமரத்துக்குளம், நல்லு கண்மாய், கரிசல்குளம், சங்கராபுரம் வெம்பக்கோட்டை குளம், லெட்சுமி நாயக்கன்பட்டி கணபதி செட்டிகுளம், வெம்பக்கோட்டை மாசானம் குளம், தேவாரம் சன்னாசி நாயக்கன் குளம், அழகிரிநாயக்கன் குளம், அழகிரி செட்டிகுளம், பெரியதேவி குளம், சின்னதேவி குளம், பழனிச்செட்டிகுளம், கிருஷ்ணபதி குளம், பெரியநாயக்கன் குளம், பொட்டிபுரம் எர்ணன் குளம், தமபிரான் குளம், கொட்டுக்காரன் குளம், திம்மிநாயக்கன் குளம்போடி வட்டம்: டெம்புச்சேரி டொம்பிச்சியம்மன் குளம், நாகமலையான் குளம், போசி கண்மாய், சாமியகவுண்டன் குளம், கவுண்டன் குளம், அம்மன் குளம், வைரவ கவுண்டன் குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், மீனாட்சிபுரம் கண்மாய், கோடாங்கிபட்டி சோதரணை குளம், சிறுகுளம், பெரியகுளம், குருவன் குளம், கணக்கன் குளம், கன்னிமார் குளம்.

Related Stories: