×

முத்துப்பேட்டையில் கனமழை சேக்தாவூது ஆண்டவர் தர்கா புனித குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது-உடனே சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பெய்த கனமழையால் சேக்தாவூது ஆண்டவர் தர்கா புனித குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதை உடனே சீரமைக்க தர்கா நிர்வாகிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தில் உலக புகழ்பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இலங்கை சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள். இந்தநிலையில் தர்கா வளாகத்தில் ஜாம்புவானோடை ஊராட்சிக்கு சொந்தமான சிபா என்னும் மிகப்பெரிய பரப்பளவில் உள்ள குளம் ஒன்று உள்ளது. இதில் ஆண்டுதோறும் சேமிக்கப்படும் தண்ணீர், இப்பகுதிக்கு மிகப்பெரியளவில் நீராதாரத்தை பெற்று தருவதுடன், இந்த தர்காவிற்கு வேண்டுதலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தை புனித குளமாக கருதி குளித்துவிட்டு செல்வார்கள். இந்த குளத்தில் குளித்தால் தீர்க்கமுடியாத நோய்கள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை இந்த பக்தர்களுக்கு உண்டு என்பதால் இதனை தண்ணீரை புனித நீராகவும் எடுத்து செல்வதுண்டு.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் கடும் இடி மின்னல் காற்றுடன் கனமழை பலமணிநேரம் பெய்து கொட்டி தீர்த்தது. இதன் எதிரொலியாக நேற்று காலை சிபா குளத்தின் முகப்பு பகுதியில் உள்ள ஒரு பகுதி சுற்று சுவரும், அதேபோல் தொழுகை பள்ளி வாசலை ஒட்டியுள்ள சுற்று சுவர் ஒரு பகுதியும் திடீரென்று இடிந்து விழுந்தன, அந்த நேரத்தில் யாரும் குளத்தில் குளிக்கததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தநிலையில் சுவர் இடிந்து விழுந்த இதன் எதிரொலியாக அருகே உள்ள உயரமாக உள்ள மற்றொரு சுவரும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்த சுவரும் இடிந்து விழுந்தால் குளத்தில் குளிப்பவர்கள் மட்டுமின்றி பள்ளி வாசலுக்கு வருபவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.சென்ற ஆண்டு ஏற்கனவே குளத்தின் தெற்கு பகுதி சுற்று சுவர் இடிந்து விழுந்தும் இதுநாள் வரை சரி செய்யாமல் உள்ள நிலையில், தற்போது கனமழைக்கு நேற்று இரண்டு பகுதி சுற்று சுவர் இடிந்து விழுந்த இச்சம்பவம் தர்கா பக்தர்களுக்கு இடையே பெரும் கவலையடையச் செய்துள்ளது.

அதே நேரத்தில் தமிழக அரசு இந்த புனித குளத்தை முக்கியத்துவம் வாய்ந்த குளமாக கருதி உடன் குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி நேரில் ஆய்வு செய்து குளத்தை முழுமையாக சீரமைக்க முன் வர வேண்டும். அதேபோல் ஆபத்தாக உள்ள மற்ற சுற்று சுவர்களை இடித்து அப்புறப்படுத்தி புதிய சுவர் கட்ட வேண்டும் என்று தர்கா நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupettai ,Sektavudu ,Lord ,Dargah , Muthupettai: Due to heavy rain in Muthupettai, the surrounding wall of the holy pond of Sekdawood Lord Dargah collapsed.
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...