×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் ஒரு விசை படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய மீனவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.

அதன்படி இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் இருக்கும் 6 மீனவர்களையும், படகையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.


Tags : Rameswaram ,Sri Lanka Navy , Sri Lanka Navy, Rameswaram fishermen, strike
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...