×

நிரந்தர பஸ்ஸ்டாண்ட் எப்போது வரும்? 50 ஆண்டுகளாக காத்திருக்கும் திருப்புவனம் மக்கள்-விரைவில் அமைத்துக் கொடுக்க கோரிக்கை

திருப்புவனம் : திருப்புவனத்தை சுற்றி 45 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 170 உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமமக்களுக்கும், எல்லையில் உள்ள  மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராமமக்களுக்கும் திருப்புவனமே பிரதானமாகும். இங்கு யூனியன் ஆபீஸ், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் நான்கு  தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, பிரசித்திபெற்ற புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்பாள் கோயில், மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன. எனவே தினந்தோறும் திருப்புவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புவனத்திற்கு ஒரு பஸ் ஸ்டாண்ட் இல்லை. எனவே மக்கள் கூட்டம் எல்லாம் சாலை ஓரங்களில் நின்றுதான் பஸ்ஸில் ஏறி இறங்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதனால் சாலைகளில்  எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

 திருப்புவனம் சிவகங்கை ரோட்டில் யூனியன் அலுவலகத்திற்கு அருகில் சிவகங்கை தேவஸ்தானம் வாரச்சந்தை நடத்தி வந்த      புல எண் 16/16ல்    சுமார் இரண்டு  ஏக்கர் பரப்பளவில் உள்ள  இடத்தில் பஸ் நிலையம் அமைக்கலாம் என அனைத்து கட்சியினரும் முடிவு செய்தனர்.  கடந்த 2000ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன் ஏற்பாட்டில் அனைத்து கட்சியினரின் முயற்சியில் 16/16 இடம்  வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்பதும் சிவகங்கை தேவஸ்தான அனுபவத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதனால் அன்றைய மாவட்ட ஆட்சியர்  தலைமையில் உடனடியாக  நடவடிக்கை எடுத்து தகர கொட்டகை அமைத்து பஸ் நிலையம் துவக்கப்பட்டது. ஒரு மாதம் பஸ் நிலையம் இயங்கிய நிலையில் தேவஸ்தானம்  நீதிமன்றம் சென்று தடையாணை பெற்று, பஸ் நிலையத்தை அகற்ற ஆர்டர்  வாங்கி வந்தது.

பஸ் நிலையத்தை அகற்றும் செய்தி அறிந்ததும் சுற்றுவட்டரா  கிராமமக்கள் சுமார் ஆயிரக்கணக்கான பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இதில் தேவஸ்தானத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்கள் பஸ் நிலையம் அமைக்க  ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் பஸ் நிலையம் அமைக்க போதுமான இடம் அமையவில்லை. அதனால் பஸ் நிலையம் எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் 12  பேரூராட்சிகள் உள்ளன. இதில் பஸ் ஸ்டாண்ட் இல்லாத ஒரே பேரூராட்சி   திருப்புவனம்தான். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பஸ் போக்குவரத்து   குறைவாக இருந்த காலத்தில்  திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோயில் அருகே  தனியார் இடத்தில்  திருப்புவனம் வழியாக மண்டபம் செல்லும் பஸ்சும், மதுரை  செல்லும் பஸ்சும் குறிப்பிட்ட  நேரத்தில் நின்று செல்லுமாறு  தென்னங்கீற்று  கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்குதான் மக்கள் சென்று பஸ் ஏறுவார்கள்.  சில நாளில்   பஸ் நிலையத்திற்கு வாடகைக்கு கொடுத்தவர்கள் திரும்பவும்  வாங்கிக் கொண்டனர். அதன் பிறகு பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் தினசரி மார்க்கெட் அருகே பஸ் நிறுத்தம் மட்டுமே இன்று வரை உள்ளது’’ என்றனர்.  

இந்த ஆண்டிற்குள் அமைக்க ஏற்பாடு

திருப்புவனம் பேரூராட்சி தலைவர்  சேங்கைமாறன் கூறுகையில், ‘‘திமுக பொறுப்பேற்று தமிழக முதல்வராக  மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்றுள்ளார். திருப்புவனம் பேரூராட்சி தலைவாக நான்  பொறுப்பேற்றபிறகு பஸ் நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுத்து  வருகிறேன். பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதனால்  பழைய அலுவலகம் உள்ள இடம், பழைய சந்தை திடல்,  அருப்புக்கோட்டை நகராட்சி  இடத்தில்   தற்போது இயங்கி வரும் வாரச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம்  செய்துவிட்டு  அந்த இடத்தில் பஸ் நிலையம் அமைக்க அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்  ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சி சார்பில் மாவட்ட  ஆட்சியரின் கருத்துரு, வரைபடங்கள் தயார் செய்து நடப்பாண்டிற்குள் பஸ்  நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறநிலையத்துறை  ஆணையர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை  அரசின் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்  என அந்த உத்தரவில்  கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையையும் அரசிடம் வலியுறுத்துவோம்’’ என்றார்.

தேவஸ்தானத்துடன் பேச்சுவார்த்தை  

தேவஸ்தானத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கொண்ட குழு தேவஸ்தானத்துடன்  சமரசம் பேச முயற்சித்தனர். பஸ் நிலையத்திற்கு சிவகங்கை மன்னர் பெயரை சூட்டலாம் என்றனர். அப்போது, தேவஸ்தான நிர்வாகம்  பஸ் நிலையம் அமைவதையும்  மன்னர் பெயர் சூட்டுவதையும் வரவேற்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் கடைகளை தேவஸ்தான நிர்வாகமே நிர்வகிக்கும் என்றதால் சமரசம் நின்று போனது. மீண்டும் தேவஸ்தானமும் பேரூராட்சி நிர்வாகமும் சமரசம் பேசிய நிலையில், அப்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Thirupunam , Tiruppuvanam : There are 45 panchayats around Tiruppuvanam. There are about 170 Utkadi villages in these panchayats.
× RELATED திருப்புவனம் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு