×

கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு தீவிரம் ஓசூர் மாநகரில் ₹13 கோடியில் திட்டப்பணிகள்-பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் என இரண்டு நகராட்சிகள் இருந்தது. மக்கள் தொகையின் அடிப்படையில், தற்போது ஓசூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த சத்யா பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஓசூர் மாநகராட்சியானது, பெங்களூரை ஒட்டி உள்ள நகரமாகும்.

இதில் மொத்தம் 44 வார்டுகள் உள்ளது. இந்த நகரில் 5 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். குளிர்பிரதேசமான இந்த நகரில், 10க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்படுகிறது. குறிப்பாக குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள நகரமாக இந்த நகரம் உள்ளது.

அத்துடன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் பயிரிடும் ஆங்கில காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், குடை மிளகாய் போன்ற காய்கறிகளும், மலர்களும் ஓசூர் நகரில் தான் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்குள்ள உழவர் சந்தை தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய உழவர் சந்தையாக உள்ளது. வடமாநிலங்களையும், தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய நகரமாக இந்த நகரம் உள்ளதால், இதை தமிழகத்தின் நுழைவுவாயில் என்றும் கூறுகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 1,300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரில், மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களை தவிர மற்ற 9 மாதங்களும் குளிர்ந்த சீதோஷண நிலை கொண்ட நகரமாக உள்ளது.

இந்த நகரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, உருது என பல்வேறு மொழிகளை பேசுவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இதற்காக இந்த பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளில் மாணவர்கள் பயில்வதற்காக, அந்த மொழியில் பள்ளி கூடங்களும் அரசால் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தின் போது, நகராட்சியாக இருந்த ஓசூரில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாமல் இருந்ததால், இந்த நகரில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இந்த மாநகராட்சியை ஒரு முன்மாதிரி மாநகராட்சியாக, பெங்களூருக்கு இணையான நகரமாக மாற்றிட தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. மேலும், மாநகராட்சிக்கு தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்திட, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.  

குறிப்பாக தினமும் ஆயிரக்கணக்கான டன் எடையில் குப்பைகள் சேருவதால், அவற்றை உடனுக்குடன் அகற்றி, நகரை சுத்தமாக வைத்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ₹6 கோடியே 65 லட்சம் மதிப்பில் தாசேப்பள்ளி என்ற இடத்தில் உள்ள உரக்கிடங்களில் உள்ள பழைய குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தற்போது முடிவுற்றுள்ளது. அத்துடன் பயோ மைனிங் முறையில் குப்பைகளை பிரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 97 சதவீத பணிகள் முடிந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள், இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும் என தெரிகிறது.

மேலும் மாநகராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் 2020-21ன் கீழ் சாலை துப்புரவு எந்திரம், கன்வேயர் பெல்ட், பாலிங் மெஷின், கழிவுநீர் குழாய்கள், டிரையிங் யார்டு என ₹3 கோடியே 31 லட்சத்து 99 ஆயிரத்தில் 9 பணிகள் முடிந்துள்ளது. 6 பணிகள் நடந்து வருகிறது. மேலும் மாநகராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் 2021- 2022ன் கீழ் வள மீட்பு மையங்கள், டிரையிங் யார்டுகள், சுற்றுச்சுவர்கள் உள்பட மொத்தம் 8 பணிகள் ₹2 கோடியில் நடந்து வருகிறது. 3 மாதத்தில் இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இவ்வாறு தற்போது வரை சுமார் ₹13 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் நகரில் வசிக்கும் பொதுமக்களும், தினமும் வந்து செல்லும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Govt ,Hosur , Hosur: The Tamil Nadu government is paying special attention to take Hosur Corporation of Krishnagiri district on the path of development.
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...