×

ஆவுடையார்கோவில் அருகே மைனாக்குடியில் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்-காசு கொடுத்து வாங்கும் அவலம்

அறந்தாங்கி : ஆவுடையார்கோவில் அருகே மைனாக்குடியில் தண்ணீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் லோடு ஆட்டோவில் வரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் புண்ணியவயல் ஊராட்சியைச் சேர்ந்தது மைனாக்குடி கிராமம். இங்கு 63 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ள மக்கள் குடிநீருக்கு லோடு ஆட்டோவில் வரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கியும், குளிப்பது உள்ளிட்ட மற்ற தேவைகள் மற்றும் கால்நடைகளுக்கு மைனாக்குடி, கருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏரிகளில் உள்ள தண்ணீரையும் பயன்படுத்தி வந்தனர்;. சமீபகாலமாக மைனாக்குடி செல்லும் சாலை மோசமாக சேதமடைந்துள்ளதால், குடிநீர் வாகனங்கள் மைனாக்குடிக்கு வழக்கம்போல் செல்வதில்லை.

மேலும் மைனாக்குடி, கருப்பூர் ஏரிகளில் மீன் பிடிப்பதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், தற்போது அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை.
இதனால் மைனாக்குடி கிராம மக்கள் குடிநீருக்கும் மற்ற தேவைகளுக்கும் தண்ணீரின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புண்ணியவயல் கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் மைனாக்குடி கிராமத்தில் சுமார் 6 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் அமைத்து கொடுத்தது.புண்ணியவயல் கிராம ஊராட்சி நிர்வாகம் 6 அடி ஆழத்தில் அமைத்து கொடுத்த குடிநீர் குழாயில் தினசரி 2 மணி நேரமே தண்ணீர் வருவதால், அந்த தண்ணீர் குடிக்க, சமைக்க, குளிக்க, கால்நடைகள் குடிக்க என தேவை அதிகமாக உள்ள நிலையில் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.எனவே மைனாக்குடி கிராம மக்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து மைனாக்குடியில் நிரந்தரமாக குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : Mainakudi ,Auduyarkovil , Aranthangi: People are suffering without water in Mainakudi near Aavudayarkovil. And the load comes on auto
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை!