வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 14 சிலைகளும் எந்த கோயில்களில் திருடப்பட்டவை?: கைதான ஆர்ட் வில்லேஜ் நிறுவனரிடம் தீவிர விசாரணை

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற பல நூறு கோடி மதிப்புள்ள 14 சிலைகள் எந்தெந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்று கும்பகோணம் ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கும்பகோணம் சிவாஜி நகரில் உள்ள ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தில் இருந்து தொன்மையான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்படி, கடந்த 20ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்த பதுக்கி வைத்திருந்த பல நூறு கோடி மதிப்புள்ள 14 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் குறித்து எந்த ஆதாரமும் அந்த நிறுவனம் நடத்தி வரும் கணபதியிடம் இல்லை. இதை தொடர்ந்து சோதனையில் கிடைத்த சிலைகள் மற்றும் ஆவணங்களை வைத்து புதுச்சேரியில் உள்ள தனியார் அருங்காட்சியகம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள 2 சிலைகள் மீட்கப்பட்டன.

 இதையடுத்து ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தின் உரிமையாளர் கணபதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், கடந்த 2017ம் ஆண்டு ரிஷபதேவர், சிவகாமி அம்மன், மகாவீரர் சிலைகள் பழங்கால சிலைகள் இல்லை என சான்று பெற்று வெளிநாடுகளுக்கு விற்கும் நோக்கில் இந்திய தொல்லியல் துறையிடம் சிலைகளை கொடுத்து சான்று பெற முயற்சி செய்துள்ளார். அதன்படி தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்த போது, தொன்மையான சிலைகள் என சந்தேகிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டது.

அந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்த போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்து அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கணபதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 14 தொன்மையான சிலைகள் எந்தெந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டது, யார் மூலம் இந்த சிலைகள் திருடப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: