மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக டிஜிட்டல் தளம்: 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கான டிஜிட்டல் மறுவாழ்வு தளத்தை வரும் 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கான டிஜிட்டல் மறுவாழ்வு தளத்தை அமர் சேவா சங்கம் உருவாக்கி இருக்கிறது. இது 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் தளம். இதற்கான லோகோவை அமர் சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: அமர் சேவா சங்கம், தமிழ்நாடு அரசின் சமக்ர சிக்‌ஷா கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்வி இயக்ககத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் டிஜிட்டல் மறுவாழ்வு தளத்தை அறிமுகம் செய்கிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன் கலந்துகொள்கின்றனர். இந்த மறுவாழ்வு தளத்தை முதல்வர் தொடங்கி வைப்பதோடு, அமர் சேவா சங்கத்தின் 40வது ஆண்டு நினைவு மலரையும் வெளியிடுகிறார். மேலும் வாழ்நாள் ஆதரவாளர்கள், பெரிய நன்கொடையாளர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகளையும் வழங்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்

Related Stories: