×

நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே அதிமுக எம்பி ஓபிஎஸ் மகன் நீக்கத்திற்கு சசிகலா கண்டனம்

சென்னை: கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை கட்சியை விட்டே நீக்குவது அறிவார்ந்த செயல் அல்ல என்று சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அதிமுகவில் சிலர் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் விதைத்து, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டதோடு, தன்னை சுற்றி இருக்கின்ற சொந்த கட்சியினரையும், ஏன் இன்னும் சொல்லப்போனால் தங்களோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மாற்றுக்கட்சியினரையும் கூட நம்ப வைத்து ஏமாற்றியதுதான் மிச்சம்.

தவறான முடிவுகளால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்.  இந்த சூழ்நிலையில், கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அதிமுக பெயரை சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்றும் கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் தொண்டர்கள் நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்கள்.  தன் சொந்த விருப்பத்திற்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை, தன் உடம்பில் உண்மையான அதிமுக ரத்தம் ஓடுகின்ற தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டுகிற வேலையை செய்வது எந்த அளவுக்கு அறிவற்ற செயலோ, அதுபோன்று இவர்களது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தொண்டர்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். நம்மை வளர்த்த நம் இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற வகையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அமைய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எனவே, அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். அதாவது, இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள்.

இவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. உண்மையான தொண்டர்களின் பேராதரவோடு, நம் இயக்கம் சீரோடும் சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோன்று இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த ஜெயலலிதா எண்ணமும் நிச்சயம் ஈடேறும். இதை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  


Tags : Sasikala ,OPS ,AIADMK ,Parliament , Sasikala condemns the removal of OPS son, the only AIADMK MP in Parliament
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...