×

சிலை கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் டிஎஸ்பி குற்றச்சாட்டு பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது சிபிஐ விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக  சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாட்ஷா அளித்த புகாரின் மீது சிபிஐ விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

அங்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த காதர்பாட்ஷா, தலைமைக் காவலராக இருந்த சுப்புராஜ் உள்ளிட்ட போலீசார் சிலைகளை கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்காமல் சென்னையில் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் கோடிக்கணக்கில் விலைபேசி விற்றுள்ளனர். இந்த தகவலை அப்போது கான்ஸ்டபிளாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் பின்னாளில் கடிதமாக எழுதி அனுப்பி இருந்தார். இதனடிப்படையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த சுப்புராஜை சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட, திருவள்ளூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவானார்.   2017ல் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து, அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிலை கடத்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், காதர் பாஷா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் சந்திர கவுருக்கு சிலைகளை கடத்தி விற்பனை செய்த பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கிலும் எனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். ஜாமீனில் விடுதலையான என்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன். மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும் மனு அளித்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது  புகாரின் அடிப்படையில் பொன்.மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ், அரசு தரப்பில் என்.எஸ்.சுகந்தன், பொன்.மாணிக்கவேல் தரப்பில் வழக்கறிஞர் வி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரரும், பொன்.மாணிக்கவேலும் காவல்துறை அதிகாரிகள். அவர்களுக்கு தேசத்தின் பெருமையை பாதுகாப்பதில் பொறுப்புகள் உள்ளன. தேசத்தின் பெருமையை காப்பதில் மற்ற நாடுகளுடன் நம்நாடு வைத்துள்ள சர்வதேச ஒப்பந்தங்களில் சமரசம் செய்யக்கூடாது. நமது நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், நம்பிக்கையையும், உணர்வையும் பிரதிபலிக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளில் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பு கூறுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, சிலை கடத்தல் வழக்குகளை கையாளும்போது பொன். மாணிக்கவேல் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவில்லை. விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.இந்த வழக்கில் இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இதில் உண்மை எது, போலி எது என்று தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை தேவையாக உள்ளது. நாட்டின் சொத்துகளான சிலைகள் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரிடம் உள்ளன.

அவை மீட்கப்பட வேண்டும். சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரவேண்டும். அதற்கு சிபிஐ விசாரணைதான் சரியாக இருக்கும். எனவே, உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. சிபிஐயில் டிஐஜி அந்தஸ்துக்கும் குறையாத அதிகாரியை விசாரணை அதிகாரியாக சிபிஐ இயக்குனர் நியமிக்க வேண்டும். விசாரணையில் எந்த அதிகாரி மீது தவறு இருந்தாலும், குற்றம் கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக சிபிஐ நடவடிக்கை எடுத்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : DSP ,Bonn ,CBI ,Manigevel , CBI investigates complaint against Pon.Manikavel, suspends DSP in idol smuggling case: High Court orders
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...