×

நீட் விலக்கு மசோதா குறித்த ஒன்றிய அரசின் 6 வகையான கேள்விகளுக்கு தமிழக சட்டத்துறை விளக்கமான பதில்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:   நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத வாதம் ஆகும். இந்த மசோதா அரசமைப்பு சட்டம் பிரிவு 14ஐ மீறுவது என்ற ஆட்சேபனையை ஏற்க முடியாது. மசோதாவில் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்களில் அடிப்படையிலான சேர்க்கை முறை வேறு எந்த சேர்க்கை முறையை விடவும் நியாயம், சமத்துவத்தை ஏற்படுத்துகிறது. எனவே அரசமைப்பு சட்டத்தை மீறுகிறது என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.

இந்த மசோதா தேசிய கல்வி கொள்கை 2020ஐ மீறியுள்ளது என்று மத்திய அமைச்சகங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள வாதம் முற்றிலும் ஏற்க முடியாது. தேசிய கல்வி கொள்கை நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தேசிய கல்வி கொள்கை மாநில சட்டமன்றத்துக்கு வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது என்பதால்,  மாநில சட்டமன்றங்களுக்கு உயர்கல்வி குறித்து சட்டம் இயற்ற முழு அதிகாரம் உள்ளது.    மசோதா குறித்த ஒன்றிய அரசின் 6 வகையான கேள்விகளுக்கு தமிழக அரசின் சட்டத்துறை பல்வேறு விளக்கங்களுடன் கூடிய சட்டரீதியான பதில்களை தயாரித்துள்ளது.

இது ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.  ஏற்புடைய பதிலாக இருக்கின்ற காரணத்தினால் ஏற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.புதிய ஜனாதிபதி அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர். நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் என்றே நாம் நம்புவோம். இந்த விஷயத்தில் வேகமான செயல்பாட்டை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் ஒவ்வொரு காயாக நகர்த்தி கொண்டு இருக்கிறார். நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


Tags : Tamil Nadu Law Department ,Union Government ,Minister ,M. Subramanian , Tamil Nadu Legal Department's Explanatory Answer to Union Government's 6 Types of Questions on NEET Exemption Bill: Interview with Minister M.Subramanian
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...