சோத்துப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோயில் விழா: துரியோதனன் படுகள நிகழ்ச்சி

மதுராந்தகம்:  சோத்துப்பாக்கம் ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோயிலில் 154ம் ஆண்டு அக்னி வசந்த விழாவில், துரியோதனன் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்துள்ள சோத்துப்பாக்கம் ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, 154ம் ஆண்டு அக்னி வசந்த விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து தருமர் ஜனனம், திரவுபதி ஜனனம், திரவுபதி கல்யாணம், சுபத்ரா கல்யாணம், ராஜசுய யாகம், பார்த்திபன் பாசுபதம், குறவஞ்சி, விராட பருவம், கிருஷ்ணன் தூது,  கர்ண மோட்சம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் தினம் தோறும் இந்த கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து, இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பாஞ்சாலி கூந்தல் முடித்தல் விழாவான துரியோதனன் படுகள நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சோத்துப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம், மோர் போன்றவை வழங்கப்பட்டது. இந்த விழாவை தொடர்ந்து நேற்று தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது, இன்று மஞ்சள் காப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சோத்துபாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: