புதுவையில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி ரவுடி படுகொலை

புதுச்சேரி:  புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (24). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தனது வீட்டில் நண்பர்கள் சக்தி (20) உள்ளிட்ட சிலருடன் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு, பேசிக் கொண்டிருந்ததார். அப்போது இரவு 10 மணியளவில் மர்ம கும்பல் அங்கு வந்தது. பன்னீர்செல்வத்தின் வீட்டினுள் புகுந்தது.

இவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், நண்பரும் தப்பிஓட முயன்றனர். ஆனால் அவர்களை துரத்திய கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. பின்னர் பன்னீர்செல்வம் மற்றும் உடனிருந்த நண்பர்களையும் அரிவாளால் சரமாரி வெட்டியது. இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். 2 பேரையும் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பன்னீர்செல்வம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சக்திக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பன்னீர்செல்வத்திற்கும், மூலகுளத்தை சேர்ந்த ஜான்டீ என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனால் ஜான்டீ கும்பல்தான் அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: