×

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய கண்காணிப்பு?: அதிகாரிகள் கலக்கம்

சென்னை: கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு 61 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது தேவைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு, அரசு தொடக்கப்பள்ளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதனைச் சார்ந்த அதிகாரிகள் கண்காணித்து வருவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளே ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது கட்டப்படாத கழிவறைகள், வீடுகள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு முறைகேடில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சில ஊராட்சிகளில் தற்போது சாலை அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக பொதுமக்கள், தலைவர்கள், காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிகளை ஆய்வு செய்யுமாறு கூறினர். இதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. அதோடு சாலை அமைப்பதற்கான கையெழுத்து இடுதல், ஆய்வு பணி மேற்கொள்ளுதலுக்காக ஒரு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதம் கமிஷனாக தரவேண்டியது உள்ளதாக காண்ட்ராக்டர்கள் புலம்பி வருகின்றனர்.

இதனை அறிந்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டிடிசிபி அப்ரூட் பெறுவது அல்லது மற்ற பணிகள் எதுவாக இருந்தாலும் பணம் இல்லாமல் வேலைகள் நடப்பதில்லை என புகார் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த முறைகேடுகள் நடக்கிறதா, லஞ்சம் வாங்கப்படுகிறதா என லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைமுகமாக கண்காணித்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையின் இந்த ரகசிய நடவடிக்கை அதிகாரிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Kummidipoondi , Anti-corruption department secret surveillance in Kummidipoondi district development office?: Officials confused
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...