×

‘ஜெட்’ வேகத்தில் பெட்ரோல், வீட்டு வாடகை, அத்தியாவசிய பொருட்களின் விலை எம்டிசி பஸ், புறநகர் - மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: உலக நாடுகளை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் வெளியில் வருவதற்கே தடை விதிக்கப்பட்டது. பிறகு தொற்று கொஞ்சம், கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது. இதையடுத்து இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பியது. அப்போது, அரசு பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. அதிலும், பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், வேலை நிமித்தமாக வெளியில் செல்லும் பலர் பொது போக்குவரத்தை தவிர்த்தனர்.

மேலும், தங்களது தினசரி பயணித்திற்காக புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதனால் தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகமாக இருந்தது.  தற்போது தமிழகத்தில் தொற்று பரவல் பெருமளவில் குறைந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மீண்டும் எம்டிசி பஸ்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவற்றில் கூட்டம் அலைமோதி வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்னையில் வாழ்வதற்கான செலவு அதிகரித்து வருவதும் ஒரு காரணமாகும்.

அரசின் தரவுகளின்படி தற்போது 29 லட்சம் பயணிகள் நாள்தோறும் எம்டிசி பஸ்களில் பயணித்து வருகின்றனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும். இதேபோல் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பொதுமக்கள் இவ்வாறு பொதுபோக்குவரத்தை விரும்புவதற்கு முதலாவதாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாகும்.அதாவது கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

இவ்வாறான பெட்ரோல் விலை உயர்வு பெரும்பாலானேரை இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க செய்கிறது. இரண்டாவதாக சென்னையில் வீடுகளுக்கான வாடகை கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், அத்தியாவசிய பொருட்களில் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மாத வருமானம், நாட்டின் விலைவாசிக்கு ஏற்றார்போல் இல்லை. இதனால், மக்கள் எந்த வகையில் தங்களது செலவினங்களை குறைக்க முடியும் என்று தினசரி யோசித்து வருகின்றனர்.அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தங்களது மாத சம்பளத்தில் பெரும் தொகையை இழக்க வேண்டியுள்ளதால், பலர் தற்போது தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

பெரும்பாலான மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள பார்க்கிங்களில் நிறுத்தி விட்டு, பொது போக்குவரத்தில் வேலைக்கு செல்கின்றனர். மேலும் வேலைக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதால், அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு தற்போது தயங்குவதில்லை. மேலும் பெரும்பாலான பணியாளர்கள் இன்றும் கூட வீடுகளில் இருந்தே பணியாற்றுகின்றனர்.

அவர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பினால் பொதுபோக்குவரத்துக்கான தேவை மேலும் அதிகரிக்கும். அரசு வழிகாட்டுதலின்படி சென்னை மாநகருக்கு குறைந்தது 2,000 கூடுதல் பேருந்துகள் தேவைப்படுகிறது. ஆனால் இதை செய்ய மாநகர் போக்குவரத்துக்கழகத்திற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. தற்போது ரூ.4,337 கோடி நஷ்டத்தை மாநகர் போக்குவரத்துக்கழகம் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டதும், மாநகர் போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : MTC ,Suburban , Petrol, house rent, prices of essential commodities at 'jet' speed Increase in ridership of MTC bus, suburban-metro trains
× RELATED பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு...