ஆத்தூர் அருகே பரபரப்பு சம்பவம்; வியாபாரியை கடத்தி பணம் பறிக்க ரவுடிக் கும்பலை அனுப்பிய ஏட்டு: 6 பேர் சிறையில் அடைப்பு

சேலம்: ஆத்தூரில் பழ வியாபாரியை கடத்த ரவுடிகளை அனுப்பிய சேலம் எஸ்பி ஆபீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைதான 6 பேரையும் ஆத்தூர் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தில்லைநகரைச் சேர்ந்தவர் அன்பரசன் (40), பழ வியாபாரியான இவர், சேலம் டவுனில் பழக்கடை வைத்துள்ளார். இவருக்கு சேலம் எஸ்பி அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் ஏட்டு ராம்மோகன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழ வியாபாரத்தில் ராம்மோகனும் பாட்னராக இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அன்பரசன் நேற்று முன்தினம் மதியம் ராமநாயக்கன்பட்டி வசிஷ்ட நதி பாலம் பகுதியில் வந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கும்பல், அன்பரசனை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை காரில் கடத்த முயன்றனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய அன்பரசன், ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், எஸ்பி ஆபீஸ் போலீஸ் ஏட்டு ராம்மோகன் அனுப்பியதன் பேரில் ரவுடிக்கும்பல் பழ வியாபாரி அன்பரசனை கடத்த முயன்றது தெரியவந்தது.

 

இதையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி தீனதயாளன் (31), அவரது கூட்டாளிகளான ஆனந்தன் (26), பன்னீர்செல்வம் (23), ஆனந்தராஜ் (21), பிரசாத்  (27) ஆகிய 5 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், ஏட்டு ராம்மோகனுக்கு அன்பரசன் ₹45 லட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. அந்த பணத்தை வசூல் செய்ய அவரை கடத்தி வரும்படி ஏட்டு கூறினார். அதனால், அன்பரசனை வழிமறித்து அடித்து உதைத்து பணத்தை கொடுக்கும்படி மிரட்டி கடத்த முயன்றோம். ஆனால் அவர் தப்பிவிட்டார், என விசாரணையில் தெரிவித்துள்ளனர். ரவுடிகளிடம் இருந்து கார், ஆட்டோ, ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் பற்றி அன்பரசன் புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று ஏட்டு ராம்மோகனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரையும், ரவுடிக்கும்பலை சேர்ந்த 5 பேரையும் ஆத்தூர் ஜே.எம்.1  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

Related Stories: