வேறு சமுதாய பெண்ணை காதலித்ததால் ஆத்திரம்; மகனை மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற தாய்: கோவையில் பரபரப்பு

கோவை: கோவையில் வேறு சமுதாய பெண்ணை காதலித்த ஆத்திரத்தில் மகனை மண் எண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற தாயின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் குமார் (29). சென்ட்ரிங் தொழிலாளி. இவர், நீண்டநாட்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை தொடர்ந்து வந்தனர். குமார் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். இந்த விவரம் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, அவரது தாய் ராணி (52) இந்த காதலை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக தாயும், மகனும் பேசிக்கொள்வதில்லை. ஆனால் குமார் அந்த இளம்பெண்ணிடம் பேசி வந்தார்.  இதையறிந்த ராணி, தனது மகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று திரும்பிய குமார் வீட்டில் உணவருந்தி கொண்டிருந்தார். அப்போது மகன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராணி, வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது குமார் குடிபோதையில் இருந்ததால் தன் மீது பற்றிய தீயை அணைத்து விட்டு வீட்டில் தூங்கி விட்டார். மறுநாள் காலை போதை தெளிந்ததும் தீக்காயத்தின் வலி தெரிந்தது.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் ராணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் மண் எண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: