×

பொதுக்குழு நாளன்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்; மாவட்ட செயலாளர்கள் உள்பட 11 பேர் முன்ஜாமீன் மனு: போலீஸ் பதில் அளிக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடந்த கலவரம் தொடர்பாக 3 மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில், காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 11 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் ெசய்தனர். இந்த மனு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி தங்க மாரியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அதுவரை மனுதாரர்களை கைது செய்ய கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags : OPS ,EPS ,General Assembly Day ,Chennai Sessions Court , OPS, EPS supporters clash on General Assembly Day; Anticipatory Bail Petition of 11 including District Secretaries: Chennai Sessions Court orders Police to respond
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்